search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுமலை வளர்ப்பு யானை முகாம்"

    முதுமலை வளர்ப்பு யானை முகாமில் கேரளாவை சேர்ந்த 3 யானைகளுக்கு கும்கி பயிற்சி தொடங்கியது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, நோய்வாய்படும் யானைகள் பிடிக்கபட்டு இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வரும் நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த, நீலகண்டன்(வயது 22), சூரியன்(20), சுரேந்திரன்(20) ஆகிய 3 யானைகள் கும்கி பயிற்சி பெற முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து இந்த 3 யானைகளும் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டன. பின்னர் பயிற்சிக்காக யானைகள் அங்குள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டன. பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சண்முகப்பிரியா, கேரள மாநில முத்தங்கா வனக்கோட்ட வன அலுவலர் சாஜன், கோவை மண்டல வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை அளித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த 3 யானைகளுக்கும் 90 நாட்கள் கும்கி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் யானைகளை ஆற்றில் குளிக்க வைத்தல், அத்துடன் காட்டு யானைகளை விரட்டுதல், ரோந்து செல்லுதல், மரங்களை தூக்கி செல்லுதல், பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுதல் என பல்வேறு வகையான கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்றனர்.

    இந்த பயிற்சிகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பாகன்கள், மருத்துவர்கள் அளிக்க உள்ளனர். நேற்று நடைபெற்ற பயிற்சி தொடக்க விழாவில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன், வனச்சரகர்கள் தயானந், சிவக்குமார், காந்தன், மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×